×

பாக்.கின் அணு ஆயுத தந்தை அப்துல் காதிர் கான் மறைவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அணு ஆயுத  தந்தை என அழைக்கப்படும் அப்துல் காதிர் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பாகிஸ்தான் நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் (85). இந்தியாவுக்கு போட்டியாக அணுகுண்டு சோதனைகளை நடத்தியவர். இதனால், அவர் பாகிஸ்தானின் அணு ஆயுத தந்தை என்று அழைக்கப்பட்டு வந்தார். இவர், இஸ்லாமிய உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கியவர் என்றும் அழைக்கப்பட்டார். பாகிஸ்தானை அணுசக்தி நாடாக மாற்றுவதில் இவர் முக்கிய பங்காற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த 2004ம் ஆண்டு பாகிஸ்தானின் அணுசக்தி தொழில்நுட்பத்தை வடகொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு ரகசியமாக கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், 2009ம் ஆண்டு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் கானை விடுவித்தது. அவர் சுதந்திரமான குடிமகன் என்றும் அறிவித்து உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். பாகிஸ்தான் அதிபர் அரீப் அல்வி, பிரதமர் இம்ரான் கான், பாதுகாப்பு துறை அமைச்சர் பர்வேஸ் கட்டாக், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Tags : Abdul Qadir Khan ,Pakistan , Abdul Qadir Khan, the father of Pakistan's nuclear weapons, dies
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...