மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து டிஜிபி திடீர் ஆய்வு

மாமல்லபுரம்: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இசிஆர் சாலையில் நேற்று காலை சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு மற்றும் மகளிர் காவல் நிலையத்தை திடீர் ஆய்வு செய்தார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தனது நண்பர்களுடன் சைக்கிளில் பயிற்சி செய்வது வழக்கம். மேலும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து எதாவது ஒரு பகுதிக்கு சைக்கிளில் சென்று துறை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு காவலர்களுக்கு ஒரு சில ஆலோசனைகளை வழங்குவார். அதன்படி, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் வரை உடற்பயிற்சிக்காக பலமுறை சைக்கிளில் சென்றுள்ளார்.

அதேப்போல், நேற்று காலை சென்னையில் இருந்து நண்பர்களுடன் சைக்கிளில் புறப்பட்ட டிஜிபி சைலேந்திரபாபு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்திற்கு வந்தார். அப்போது, மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு மற்றும் மகளிர் காவல் நிலையம் சென்று வழக்கு பதிவேடுகள், அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, காவலர் குடியிருப்புக்கு சென்று சுற்றி பார்த்து அவர் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன், மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் நடராஜன், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்யபாமா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Related Stories:

More