×

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, வட்டார மருத்துவர் கோவிந்தராஜ் ஆகியோர் வரவேற்றனர். மேலும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழு தலைவி கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட துணை இயக்குனர் ஜவகர், உதவி இயக்குனர் (பேரூராட்சி) கண்ணன், கோட்டாட்சியர் செல்வம், உதவி திட்ட மேலாளர் மோகனசுந்தரம், வட்டாட்சியர் மகேஷ், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், நகர செயலாளர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, `திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என மொத்தம் நான்காயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 88 ஆயிரத்து 300 பேர். இதில் 16 லட்சத்து 86 ஆயிரத்து 69 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,’ இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், ரமேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : corona ,vaccination ,Gummidipoondi municipality ,Minister ,Avadi Nasser , 5th phase of corona vaccination camp in Gummidipoondi municipality: Minister Avadi Nasser inaugurated
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...