திருவேற்காடு, பூந்தமல்லியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை தலைமை செயலாளர் திடீர் ஆய்வு

பூந்தமல்லி: திருவேற்காடு, பூந்தமல்லியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை தலைமை செயலாளர் இறையன்பு, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 3வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, கடந்த 4 வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாபெரும் சிறப்பு தடுப்பூசிகள் முகாம் நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்நிலையில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், நேற்று திருவேற்காடு நகராட்சியில் 5வது கட்டமாக பேருந்து நிலையம், நகராட்சி அலுவலக வளாகம் உள்பட 20 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், முகாமில் பயனாளிகளுக்கு எவ்வாறு தடுப்பூசி போடப்படுகிறது, போதுமான தடுப்பூசி கையிருப்பு உள்ளதா, முறையாக பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தப்படுகிறதா, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து காட்டுப்பாக்கம், பூந்தமல்லி நகராட்சி ஆகிய பகுதிகளிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களையும் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்களிடம், `இது எத்தனையாவது டோஸ்,’ என்ற விவரங்களை கேட்டறிந்தார். இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், நகராட்சி ஆணையர்கள் திருவேற்காடு வசந்தி, பூந்தமல்லி ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>