பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வாலிபர் உயிருடன் எரித்துக்கொலை: மீஞ்சூர் அருகே பரபரப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நாலூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபிநாதன் (33). இவருக்கு, பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் தனது உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்புகொண்ட கோபிநாதன், ‘‘நாலூர் ஏரிக்கரை அருகே என்னை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து, பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்கள். உடனே வந்து என்னை காப்பாற்று...’’ என்று கதறியுள்ளார். உடனே, அந்த உறவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு, கோபிநாதன் எரிந்த நிலையில் அங்கும் இங்கும் ஓடி கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி கோபிநாதன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கோபிநாதன் தன்னை 6 பேர் எரித்து கொலை செய்ததாக கூறியிருப்பதால், அது தொடர்பாக விசாரிக்கின்றனர். இதனிடையே, கோபிநாதன் ஒரு பெண்ணுடன் ஏரிக்கரைக்கு செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

மேலும், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில், அவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கும் காட்சியும் பதிவாகியிருந்தது. எனவே, கோபிநாதன் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா, அவருடன் சென்ற பெண் யார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், கோபிநாதனுக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில் யாராவது தீ வைத்து எரித்தார்களா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>