×

எத்தனால் எரிபொருளை ஊக்கப்படுத்தினால் மக்கள் சாப்பிட சோறே இருக்காது: ஒன்றிய அரசுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலே அதிகளவில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் பெரும் பகுதி வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இவற்றின் விலையும் இந்தியாவில் உயர்கிறது. தற்போது, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசலின் லிட்டர் விலை ரூ.100 ஐ தாண்டி விட்டது. மேலும், இவற்றின் பயன்பாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசும் அதிகமாக ஏற்படுகிறது.

இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினத்தை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கவும், வாகனங்களில் எத்தனால் கலந்த எரிபொருள் பயன்படுத்தும் திட்டத்தை ஒன்றிய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அரிசி, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள், கரும்பு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த பிரதமர் மோடி, சமீபத்தில் இதை 5 ஆண்டுகளாக குறைத்தார். இதன்படி, வரும் 2025க்குள் எத்தனால் பயன்பாடு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், எத்தனால் உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கான உரிமங்களை வழங்குவது, மானியம் அளிப்பது போன்ற சலுகைகளையும் அவர் வாரி வழங்கியுள்ளார்.

இந்நிலையில், உணவு தானியங்களில் இருந்து எத்தனால் தயாரிப்பதை ஊக்கப்படுத்துவதால், எதிர்காலத்தில் இந்தியாவில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ‘எத்தனால் தயாரிப்புக்கு உணவு தானியங்கள் அதிகளவில் பயன்படுத்தபட்டால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி உயரும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அமல்படுத்தப்பட்டு உள்ள எத்தனால் திட்டத்தால், அந்நாடுகளில் உணவு -எரிபொருள் மோதல் ஏற்கனவே உருவாகி விட்டது. இதனால், எத்தனால் எரிபொருள் திட்டத்துக்கு பதிலாக, மினசார வாகனங்களை ஊக்குவிப்பதே நாட்டின் எதிர்கால உணவு பாதுகாப்புக்கு ஏற்றதாக இருக்கும்,’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

* ஒரு டன் மக்காச்சோளத்தில் இருந்து 350 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும்.
* ஒரு டன் அரிசியில் இருந்து 450 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம்.

* ஒரு ஆபத்தும் இல்லை
ஒன்றிய உணவு அமைச்சக உயரதிகாரியான சுதன்சு பாண்டே கூறுகையில், ‘‘இந்திய உணவு கழகத்திடம் அதிகளவிலான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதனால், எத்தனால் எரிபொருள் திட்டத்தால் நாட்டின் உணவு பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்பட வாயப்பில்லை. அரசிடம் தற்போது, 2 கோடியே 18 லட்சம் டன் அரிசி கையிருப்பு உள்ளது. ஆனால், நமது தேவை ஒரு கோடியே 30 லட்சம் டன் மட்டுமே,’’ என்றார்.

Tags : U.S. government , People will not have sorghum to eat if ethanol is encouraged: Experts warn U.S. government
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...