திருப்பதி கோயிலில் 4ம் நாள் பிரமோற்சவம் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று இரவு கருட சேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இன்று கருட சேவை நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மதியம் ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

இதைத்தொடர்ந்து நேற்றிரவு நடைபெற்ற உற்சவத்தில் சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக மாட வீதியில் சுவாமி உலா ரத்து செய்யப்பட்டுள்ளதால் கோயில் மண்டபத்தில் சுவாமி அருள்பாலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி காட்சி அளிக்க உள்ளார். இரவு பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நடைபெற உள்ளது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்க உள்ளார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

* ஆண்டாள் சூடி கொடுத்த மாலை

திருப்பதி ஏழுமலையான் கோயில் கருட சேவையையொட்டி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடி கொடுத்த கிளியுடன் கூடிய மாலை நேற்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது. ஆண்டாள் மாலைக்கு ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் வைத்து தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் ஊரவலமாக யானைகள் அணிவகுத்து முன் செல்ல நாதஸ்வர வாத்தியங்களுக்கு மத்தியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோயில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாலை நாளை காலை ஏழுமலையானுக்கும், பிரமோற்சவத்தின் 5வது நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமிக்கும் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

* ரூ.1.96 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன டிக்கெட், ஆன்லைன் மூலம் ரூ.300 தரிசனம் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் தற்போது பிரமோற்சவம் நடைபெற்று வருவதால் திருமலையில் அதிகளவு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 25,377 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 11,998 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். கோயிலில் நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.1.96 கோடியை அங்குள்ள உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Related Stories: