×

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயந்து பண்டிட்கள் வெளியேறுவதை தடுக்க காஷ்மீரில் களம் இறங்கியது என்ஐஏ: அதிரடி சோதனைகள் மூலம் 570 பேர் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, கொன்று வருகின்றனர். இந்த வாரத்தில் மட்டுமே பொதுமக்கள் 7 பேரை அவர்கள் கொன்றுள்ளனர். அதில், 4 பேர் இந்து, சீக்கிய மதங்களை சேர்ந்தவர்கள். ஸ்ரீநகரில்  சில தினங்களுக்கு முன் பள்ளியில் நுழைந்த தீவிரவாதிகள், பள்ளியின் சீக்கிய முதல்வரையும், இந்து ஆசிரியர் ஒருவரையும் வெளியே இழுத்து வந்து சுட்டு கொன்றனர். இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் இச்செயலை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த  தாக்குதல்களால் பீதி அடைந்துள்ள இந்துக்களான பண்டிட்கள், மீண்டும் காஷ்மீரை விட்டு குடும்பத்துடன் வெளியேறி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழித்து, அமைதியை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று வருவதாக ஒன்றிய அரசு கூறி வரும் நிலையில், பண்டிட்கள் வெளியேறுவது அதற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், சிறுபான்மை மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக, ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்குக்கு ஆபத்தாக கருதப்படும் நபர்களை ஒடுக்கும் அதிரடி நடவடிக்கையில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.

இது, காஷ்மீர் போலீசார், சிஆர்பிஎப் போலீசாரின் உதவியுடன் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி, தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்களை களை எடுத்து வருகிறது. ஸ்ரீநகர், அனந்த்நாக், குல்காம் உள்ளிட்ட 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி,  70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்தனர். இதுபோல், கடந்த 3 நாட்களில் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் 570 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் மூலம்தான், தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் மீதான தாக்குதல் நடத்துவதற்கான தகவல்கள் கிடைப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி அவர்களிடம் தீவிர விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

Tags : NIA ,Kashmir , NIA steps down in Kashmir to prevent pundits from leaving for fear of militant attack: 570 arrested in raids
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...