முன்கூட்டியே விடுதலையானது எப்படி? நடிகர் சஞ்சய் தத் பற்றிய தகவல்களை தர வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு

புதுடெல்லி: முன்னாள்  பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்குதான் உள்ளது என முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இந்நிலையில், பேரறிவாளன் தரப்பில் மும்பை எரவாடா மற்றும் ஆர்தர் ரோடு சிறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி ஒரு விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த 1993ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத், முன் கூட்டியே எப்படி விடுதலை செய்யப்பட்டார்? அதில், மாநில அரசின் அதிகாரம் மட்டும் தான் இருந்ததா அல்லது ஒன்றிய அரசும் விடுதலைக்கு ஒப்புக் கொண்டதா? இந்த  விடுதலையில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள் என்னென்ன? என்பது குறித்த அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இதற்கு சிறை நிர்வாகம் பதிலளிக்க மறுத்து விட்டது.

இது தொடர்பாக, பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிலேஷ் உக்கே, மும்பை உய ர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ரிட் வழக்கானது நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‘மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும், நாங்கள் கேட்ட தகவல்களை வழங்கும்படி எரவாடா, ஆர்தர் ரோடு சிறை நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: