லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் கொலை போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ஒன்றிய அமைச்சர் மகன் ஆசிஷ் முரண்டு: 14 நாட்கள் சிறையில் அடைப்பு

லக்கிம்பூர் கேரி: உத்தரப் பிரதேசத்தில் 4 விவசாயிகளை காரை ஏற்றி கொன்ற வழக்கில், சிறப்பு புலனாய்வு படை நடத்திய 12 மணி நேர விசாரணையில், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா பதில் அளிக்காமல் முரண்டு பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ம் தேதி காரை ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகள், பாஜ.வை சேர்ந்த 4 பேரையும், பத்திரிகையாளரையும் அடித்து கொன்றனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.  ஆனால், இது தொடர்பாக அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு போலீசார் ஏற்கனவே அனுப்பிய சம்மன்படி, சிறப்பு படை போலீசாரிடம் நேற்று முன்தினம் காலை 10.30க்கு ஆசிஷ் ஆஜரானார். 12 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் சிறப்பு புலனாய்வு படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கேள்விகளுக்கு அவர் ஒழுங்காக பதில் அளிக்கவில்லை என்றும், முன்னுக்குபின் முரணமாக பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, நீதிபதியின் முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு குறித்து நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

* மகாராஷ்டிராவில் இன்று பந்த்

காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து, மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இன்று மாநிலம் தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, இன்று காலை முதல் பந்த் நடக்கிறது. அதில், அனைத்து எதிர்க்கட்சிகளும்  பங்கேற்கின்றன.

* 2வது எப்ஐஆரில் பெயர் இல்லை

லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக டிகோனியா காவல் நிலையத்தில் கடந்த 4ம் தேதி 2வது வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை மல்லியுத்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பதற்காக சென்ற பாஜ தொண்டர்களில் ஒருவரான சுமித் ஜெய்ஸ்வால் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், வேளாண் சட்ட போராட்டக்காரர்கள் இடையே இருந்த தீய சக்திகள் பாஜ தொண்டர்களை தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றது அல்லது ஒன்றிய இணை அமைச்சரின் மகன் காரில் இருந்தது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அடையாளம் தெரியாத மர்ம நபர் பாஜ தொண்டர்களை ஆபத்தான ஆயுதங்களால் தாக்கியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

* இந்து - சீக்கியர்கள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிலிபிட் மக்களவை தொகுதி பாஜ எம்பி.யான வருண் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை இந்து - சீக்கிய மோதலாக  மாற்றுவதற்காக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த தவறான அணுகுமுறையை உருவாக்குவது தேசிய ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானது. நமது தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தி, அற்ப அரசியல் ஆதாயங்களை தேடக் கூடாது,’ என கூறியுள்ளார்.

Related Stories: