×

அடகுக்கு வந்த நகையால் அம்பலத்துக்கு வந்த வேட்பாளர் குட்டு: பித்தளை காசை தங்கம் என கொடுத்து பித்தலாட்டம்

சென்னை: ஓட்டுப் பதிவு நாளன்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், கொழுமணிவாக்கம் ஊராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தங்க காசு கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுபோட்டவர்களில் சிலர், அதை அடகு கடையில் வைத்தபோதுதான், அது பித்தளை காசு என்பது தெரியவந்தது. இதனால், தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதை ஜீரணிக்க முடியாத சிலர் ஓட்டுக்கு காசு கொடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்களாம். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி, 1வது வார்டு வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று காலை அவசர அவசரமாக வேட்பாளர் ஒருவர் தங்க நாணயங்களை அன்பளிப்பாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை பெற்றுக் கொண்ட பொதுமக்களில் பலர், அவருக்கு ஆதரவாக தங்களது வாக்குகளை பதிவு செய்தார்களாம்.

இந்த நிலையில், தேர்தல் முடிந்ததும், தங்களுக்கு இலவசமாக கிடைத்த தங்க நாணயங்களை, அப்பகுதி பொதுமக்களில் சிலர், அடகு வைத்து பணம் பெறுவதற்காக அருகில் உள்ள அடகுக் கடைகளுக்கு சென்ற போது தான், அவை அனைத்தும் போலி என்று தெரிய வந்தது. மேலும் தங்களிடம் தங்க நாணயம் என்று கூறி பித்தளையை கொடுத்து பித்தலாட்டம் செய்து நூதன முறையில் தங்களது வாக்குகளை பெற்றதும் தெரிய வந்தது. இதனால், வேட்பாளரை தங்கள் மனதில் வைத்து கரித்து கொட்டுகிறார்களாம். ஓட்டு பதிவு நாளில் ஓட்டுக்காக பொதுமக்களிடம் தங்கநாணயம் என்று கூறி, பித்தளையை கொடுத்தார். தேர்தல் விதியை மீறி ஓட்டுக்கு போலி தங்க காசு கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வார்டு, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்களாம். மேலும், கொழுமணிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தேர்தல் செல்லாததாக அறிவித்து, உடனடியாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். மேலும், எங்கள் பகுதிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்து இருக்காங்க.


Tags : Candidate ,Kuttu , Candidate Kuttu exposed by pawned jewelery: Brass giving brass coin as gold
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...