×

‘‘சரியான வியூகம் அமைக்காததால் எதிர்க்கட்சியானோம்’’ தலைமையை நம்பி அதிமுக இல்லை கட்சியில் சில மாற்றங்கள் வேண்டும்: செல்லூர் ராஜூ பேச்சால் சலசலப்பு

மதுரை: ‘‘இன்றைக்கு தலைமையை நம்பி அதிமுக இல்லை. தொண்டர்ளை நம்பியே உள்ளது’’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை நடத்துவது தொடர்பாக  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  மதுரையில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்டச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை வகித்து பேசியதாவது: மக்கள், தொண்டர்களின் அன்பு, ஆசை காரணமாக நான் பத்தாண்டு அமைச்சராக இருந்தேன். அமைச்சராக இருந்த போதும் என் நிலையை மாற்றியது இல்லை. என்னை பற்றி யார் என்ன சொன்னலும் நான் கவலைப்படுவதில்லை.

அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். அதற்கு எடுத்துக்காட்டு தான் இபிஎஸ், ஓபிஎஸ்.  ஒரு காலத்தில் கட்சியில் பதவிக்கு வர எத்தனையோ தியாகங்களை செய்ய வேண்டும். தற்போது வரலாறு மாறி உள்ளது. இன்றைக்கு கட்சியில் (அதிமுகவில்) சில மாற்றங்களை செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. அதற்கு இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகள் கொடுக்க வேண்டும். தலைமையை நம்பி இந்த இயக்கம் இருக்கவில்லை. தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது.

அதிமுக ஆளும்கட்சியாக இருந்த போது நமது கட்சித்தலைமை சரியான வியூகம் அமைக்கவில்லை. இதனால், இன்று நாம் எதிர்க்கட்சியாக அமர்ந்து விட்டோம். அதிமுகவை விட்டு ஓடியவர்களை பற்றி கவலையில்லை. திராவிட இயக்கங்களின் 50 ஆண்டுகளுக்கு மேலான ஆட்சியில்தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த வளர்ச்சி இல்லை. இவ்வாறு அவர் பேசினார். தலைமையை குற்றம்சாட்டி செல்லூர் ராஜூ பேசியது, கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Tags : Sellore Raju , AIADMK needs some changes in party: Cellur Raju
× RELATED நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம்...