×

மீனவர் நல ஆர்வலர் அருளானந்தம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் நல ஆர்வலர் அருளானந்தம் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்தவர் அருளானந்தம் (75). இவர் 50 ஆண்டுகளாக மீனவர் உரிமை, நலனுக்காக போராடி வந்தார். மீனவர்களுக்கான பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், நேற்று காலமானார். அருளானந்தம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் ‘தீவுக்கவி’ அருளானந்தம் திடீர் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த அருளானந்தம் அரைநூற்றாண்டாக இந்திய - இலங்கை மீனவர்களின் வாழ்வுரிமைப் போராளியாகக் களத்தில் முன்னின்ற சிறந்த செயற்பாட்டாளரும் கவிஞரும் ஆவார்.

இந்திய - இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி, வாழ்வாதாரத்திற்கு உயிரைப் பணயம் வைத்துக் கடலில் இறங்கும் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும்போதும் தாக்குதலுக்குள்ளாகும்போதும் அவர்களுக்குப் பக்கபலமாகவும் சட்டத்துணையாகவும் இருந்தவர். அரசுகளுடனான பேச்சுவார்த்தைகளில் மீனவர்களின் பிரதிநிதியாகப் பங்கேற்று அவர்களின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் உயிருக்காகவும் முக்கியப் பங்காற்றியவர்.

மீனவர்களுக்கு, குறிப்பாக தினக்கூலி அடிப்படையில் மீன்பிடிக்கச் செல்வோருக்கும் - மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களின் விடுதலைக்கும் போராடியுள்ளார் என்பதும் அவரது மனிதநேயத்தின் அகன்ற சிந்தனைக்குச் சான்றாக அமைகிறது. மீனவ சமூகத்தினரை மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றுள்ள அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Arulanantham ,Chief Minister ,MK Stalin , Fisherman welfare activist Arulanantham passes away: Chief Minister MK Stalin's condolences
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...