மசினகுடி வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் 2 புலிகளின் உருவம் சிக்கியது: டி23 புலி இல்லை என வனத்துறை விளக்கம்

கூடலூர்:  நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதிகளில் 4 பேரை டி23 புலி தாக்கி  கொன்றது. இந்த புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் வனத்துறையினர், அதிரடிப்படையினர், தொண்டு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். வனத்தில் கூடுதலாக சுமார் 65 கேமராக்களை பொருத்தி கடந்த 15 நாட்களாக தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டும் புலி இன்னமும் சிக்கவில்லை. நேற்று 16வது நாளாக புலியை பிடிக்கும் பணி  நடந்தது. ஆனால் புலி வனத்துறையினரின் கண்களில் சிக்கவில்லை. இந்த நிலையில் வனத்தில் பொருத்தப்பட்டுள்ள 2 கேமராவில் மேலும் 2 புலியின் உருவம் பதிவாகியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: டி23 புலியின் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கேமராக்களும் இன்று (நேற்று) சோதனை செய்யப்பட்டன. அப்போது சிங்காரா வனப்பகுதியில் இருந்த கேமராக்களில் 2 புலிகளின் உருவம் பதிவாகி இருந்தது. ஆனால் அது டி23 புலி அல்ல என்பதும், அவை வெவ்வேறு புலிகள் என்பதும் தெரியவந்தது. கடந்த 8ம் தேதி மாயார் பகுதியில் புலியால் மாடு கொல்லப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வைக்கப்பட்ட கேமராக்களிலும் புலி உருவம் பதிவாகவில்லை என தெரிவித்தனர்.

Related Stories:

More
>