×

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆயுதபூஜை சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்: 3 பேருந்து நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்வோரின் வசதிக்காக சுமார் 3,500 பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மூன்று பேருந்து நிலையங்களில் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு படிப்பு, பணி, தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அப்போது அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். அப்போது கூடுதல் பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 14, 15ம் தேதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி ஆகும். இதன் காரணமாக பெரும்பாலானோருக்கு நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து நாளை முதல் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
 இதனால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனைக்கட்டுப்படுத்தும் வகையில் வரும் 12.10.2021 மற்றும் 13.10.2021 ஆகிய நாட்களில் சுமார் 3,500 பஸ்கள் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆயுத பூஜைக்கான சிறப்பு பஸ்கள் இயக்கம் நாளை தொடங்குகிறது. மேலும் கூட்ட நெரிசலை  தவிர்க்கும் பொருட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற தடப்பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது இயக்கப்பட்டது போன்ற  அட்டவணைபடி  இயக்கப்படும் மற்றும் இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். அதன்படி, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.  திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு,  திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும்  திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு  பேருந்து நிலையம் இருந்து இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும்  சிதம்பரம் வழி ஈசிஆர்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம்,திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி,அரியலூர், ஜெயங்கொண்டம்,திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு) இயக்கப்படும். இந்த இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து  இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள்  கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Armed special buses to run tomorrow to avoid congestion: Special arrangements at 3 bus stands
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...