தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மாநில சராசரியைவிட குறைந்துள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு மாநில  சராசரி எண்ணிக்கையை விட குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகம்  முழுவதும் நேற்று 5வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெறும் தடுப்பூசி  முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது  மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு  ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முதல்முறையாக, 32,017 இடங்களில் நேற்று  தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது. இதுவரை 5.03 கோடி டோஸ்  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. காலம் கடந்தும் கோவிஷீல்டு 2வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் 20  லட்சம் பேரும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தாமல், 6.85 லட்சம் பேரும்  உள்ளனர்.

தமிழகத்தில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உயிரிழந்தவர்களில் 96% பேர்  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். உயிரிழந்தவர்களில் 4% பேர் மட்டுமே  தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேற்கு மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது. 18  மாவட்டங்களில் மாநில சராசரியான 1.1 என்ற விகிதத்திலிருந்து குறைந்துள்ளது. ஆனாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வரும் 3 மாதங்களில் டெங்கு  பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். மக்கள் தங்களது இல்லங்களை  சுற்றி மழை நீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும். 375 பேர் டெங்கு  பாதிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் டெங்குவால் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>