9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் முடிந்தது.! நாளை வாக்கு எண்ணிக்கை: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு  நடைபெற்ற  2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. 2ம் கட்ட தேர்தலில் 78.47 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 35 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரணத் தேர்தல்களுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவும், ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 9.10.2021 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்த வாக்குப்பதிவில் 9 மாவட்டங்களில் மொத்தம் 78.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூந்தண்டலம் கிராம ஊராட்சி, வாக்குச்சாவடி எண்.173(அனைத்து வாக்காளர்களுக்குமான வாக்குச்சாவடி)க்கு ஒதுக்கப்பட்ட குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 12க்கான உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் தவறாக சின்னம் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், பூந்தண்டலம் கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 12க்கான உறுப்பினர் தேர்தலுக்கான மறுவாக்குப்பதிவினை 11.10.2021 (இன்று) நடத்திட ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு ஆலப்பாக்கம் கிராம ஊராட்சி, வார்டு எண் 1 மற்றும் 2க்கென பொதுவாக அமைக்கப்பட்ட இருவார்டு வாக்குச்சாவடி எண் 32ல் 1வது வார்டுக்கான உறுப்பினர் பதவியிடம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2வது வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டுக்களை 1வது வார்டைச் சார்ந்த வாக்காளர்களுக்கும் வழங்கியது தெரியவந்தது.இதனால் இந்த வார்டில் இன்று மறு வாக்குபதிவு நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. மொத்தம் 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

Related Stories:

More
>