×

சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனர் அலுவலகங்களுக்கான காவல் நிலையங்கள் பிரிப்பு: தமிழக காவல் துறை அறிவிப்பு

சென்னை: நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்பட்ட சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கான காவல் நிலையங்கள், எல்லைகளை பிரித்து, தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் துறை தற்போது ஒரு கமிஷனர், 4 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள், மத்திய குற்றப்பிரிவு, நிர்வாகம் என 28 துணை கமிஷனர்கள் ஆகியோர் தலைமையில் 137 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. நிர்வாக வசதிக்காகவும், மாநகராட்சிக்கு ஒரு காவல் ஆணையர் அலுவலகம் என்ற வகையில் 3ஆக தமிழக அரசு பிரித்து உத்தரவிட்டது. அந்த வகையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,  ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரித்து அரசாணையும் வெளிடப்பட்டுள்ளது.

அதன்படி தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பிரிக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கு உளவு பிரிவு, நிர்வாக பிரிவு என அனைத்து பிரிவுகளும் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகத்திற்கான எல்லைகள் மற்றும் காவல் நிலையங்கள் எவை எவை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் கட்டுப்பாட்டில் அதாவது சென்னை மாவட்டத்தில் பூக்கடை காவல் நிலையம் முதல் ராயிலா நகர் காவல் நிலையங்கள் வரை மொத்தம் 104 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளடக்கியுள்ளது.

ஆவடி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில், பால் பண்ணை, செங்குன்றம், மணலி, சாந்தாங்காடு, மணலி புதுநகர், எண்ணூர், மாங்காடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, முத்தாபுதுப்பேட், பட்டாபிராம்,அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்ேடட், கொரட்டூர்,திருவேற்காடு,எஸ்ஆர்எம்சி, ஆவடி, டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், திருநின்றவூர்  என சென்னை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளவேடு, செவ்வாய்பேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் என 25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் தாம்பரம்,குரோம்பேட்டை, சேலையூர், சிட்லப்பாக்கம், பீர்க்கங்கரணை, குன்றத்தூர், பல்லாவரம், சங்கர் நகர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, கானாத்தூர், செம்மஞ்சேரி, கண்ணகிநகர் என சென்னை மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம், மணிமங்கலம் என 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Tambaram ,Avadi Commissioner's ,Tamil Nadu Police Department , Separation of Police Stations for Chennai, Tambaram and Avadi Commissioner's Offices: Notice of Tamil Nadu Police Department
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்