×

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை.! பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அபாயம்: ஒதுக்கீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையால், பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால், தினசரி நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவின் மின்சார தேவையில் பெருமளவு அனல்மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது. மின்சார உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியே எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உலகம் முழுவதும் தற்போது நிலக்கரிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகின்றன. சமீபத்தில், சீனாவில் நிலக்கரி தட்டுப்பாட்டால், பெரிய தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தின.

அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக சீன மக்கள் தவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக நிலக்கரி கையிருப்பு மிக வேகமாக தீர்ந்து வருவதாக தகவல்கள் பரவுகின்றன. நாட்டில் மொத்தம் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் இருப்பதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக, அனல் மின்நிலையங்களில் 14 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் வைத்திருக்கப்படும். ஆனால், சில மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த நாள் தேவைக்கே கூட நிலக்கரி இல்லாத மிக மோசமான தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் காரணமாக, மின் விநியோக நிறுவனங்களான டாடா பவர் மற்றும் கெயில் ஆகியவை நிலக்கரி பற்றாக்குறை இருப்பதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் வாயிலாக எச்சரிக்கை செய்து வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, தற்போதுதான் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்து இருப்பதால், மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் கடந்த 8ம் தேதி அதிகபட்சமாக மின் தேவை 172.41 ஜிகா வாட்டாக அதிகரித்துள்ளது. ஆனால், நிலக்கரி தட்டுப்பாட்டால், 135 அனல் மின் நிலையங்கள் மூலம் 165 ஜிகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடிய நிலை தற்போது நிலவி வருகிறது. எனவே, பொருளாதார மீட்பு பணிகள் மின் பற்றாக்குறையால் தொய்வடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, அனல் மின் நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரி ஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டுமென பல மாநில முதல்வர்களும் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர். கடந்த 3 மாதங்களாகவே நிலக்கரி இருப்பு போதிய அளவு இல்லாததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கேரளாவுக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம், நிலக்கரி பற்றாக்குறையால் 30 சதவீதம் மட்டுமே கிடைத்திருப்பதாகவும், இதே நிலை தொடர்ந்தால் மாநிலத்தில் மின்வெட்டு அமல்படுத்த வேண்டியிருக்கும் என அம்மாநில மின்துறை அமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். பஞ்சாப்பில் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, உற்பத்திகள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது.  

பொதுவாக உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். ஆனால் அதற்கும் தற்போது வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் நிலக்கரி இறக்குமதி என்பதும் சாத்தியமில்லாத ஒன்றாகி உள்ளது. நிலக்கரிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இதேபோல் நீடித்தால், பல மாநிலங்கள் மின்சார உற்பத்தி இல்லாமல் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி,  இந்தியாவில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு நிலக்கரி தட்டுப்பாடு நிலை நீடிக்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மின் தட்டுப்பாட்டுக்கு வழிவகுப்பதோடு, தொழில் துறை முடங்கி, பொருளாதார மீட்பு பணிகளையும் மந்தாக்கி விடும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதை சமாளிக்க, கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 1.6 மில்லியம் டன் அளவுக்கு  நிலக்கரி விநியோகம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக மின்துறை அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags : U.S. government , Coal shortage across the country.! Risk of power shortages in many states: Request to the U.S. government to increase the allocation
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...