×

ஆயுத பூஜையை முன்னிட்டு சிங்கம்புணரியில் பொரி தயாரிப்பு பணி தீவிரம்

சிங்கம்புணரி: ஆயுத பூஜையை முன்னிட்டு சிங்கம்புணரியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை  மாவட்டம் சிங்கம்புணரியில் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பொரி தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. மற்ற பகுதியை விட சிங்கம்புணரி பொரிக்கு தனி சிறப்பு உண்டு. குறிப்பாக மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் பொரியின் சுவை உப்பு தன்மையாக இருக்கும். ஆனால், சிங்கம்புணரியில் தயாரிக்கப்படும் பொரி இனிப்புச்சுவை மிகுந்ததாக இருக்கும்.

இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் ஆர்வமுடன் வந்து வாங்கி செல்வர். பொரி தயாரிப்பதற்காக கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தரமான நெல் ரகங்கள் கொள்முதல் செய்யப்படும். நெல் மற்றும் அரிசியை சீனி, உப்புதண்ணீரில் ஊற வைத்து உலர்த்தி 7 நாள் பக்குவத்தில் பொரி தயாரிக்கப்படும். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இல்லாததால் பலர் இத்தொழிலை விட்டு மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். இருப்பினும் ஒரு சிலர் பாரம்பரிய முறையில் பொரி தயாரித்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

வரும் 14ம் தேதி ஆயுதபூஜை என்பதால் பொரி தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘சிறுவர் முதல் பெரியவர்கள் அனைவரும் பொரியை விரும்பி சாப்பிடுவர். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பொரிக்கான தேவை அதிகமாக இருக்கும். விசேஷங்கள் மற்றும் மழை காலங்களில் தேவை அதிகமாக உள்ளதால் இந்நேரங்களில் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். காலமாற்றத்திற்கு ஏற்ப இனிப்பு பொரி, கார பொரி தயாரித்து விற்பனை செய்கிறோம்.

சிங்கம்புணரி பொரியின் சிறப்பை கூற வேண்டுமென்றால் பழநி முருகன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், திருச்சி சமயபுரம் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சிங்கம்புணரி பொரி கிடைக்கும் என அறிவிப்பு பலகை வைத்திருக்கப்படும்’ என்றனர்.

Tags : Intensification of Pori preparation work at Singampunari ahead of Armed Puja
× RELATED ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி...