×

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்கவேண்டும்: கனிமொழி எம்பியிடம் கிராமமக்கள் மனு

தூத்துக்குடி: மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கனிமொழி எம்பியிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான், மடத்தூர், குமரெட்டியாபுரம், சாமிநத்தம், அய்யனடைப்பு, சோரீஸ்புரம், ராஜாவின்கோவில், பண்டாரம்பட்டி, புதூர்பாண்டியாபுரம், காயலூரணி, தெற்கு, வடக்கு சிலுக்கன்பட்டி, நயினார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் நேற்று சிப்காட் வளாகத்தில் மரம் நடும் விழாவில் பங்கேற்ற கனிமொழி எம்பியை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், எங்கள் கிராமங்களுக்கு மிக அருகேயுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் மூலமாக நாங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்று பெரிதும் பயனடைந்து வந்தோம். பல்வேறு வதந்திகளால் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் வேலையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெளியூர் சென்று பிழைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வெளியிடங்களுக்கு சென்று வேலை பார்த்தாலும் போதுமான ஊதியம் கிடைக்காமல் வறுமையில் வாடுகிறோம்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் எங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தது. குறிப்பாக கிராமங்களிலுள்ள குளங்களை தூர் வாருதல், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வந்தனர். மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவராக மேம்படுத்தி உள்ளனர். மருத்துவ முகாம்களை நடத்தி எங்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சைகளையும் வழங்கினர். ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தியது.

தற்போது, ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள், மகளிர் குழுவினர், முதியோர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். எனவே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறந்து செயல்படுவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Kanimozhi MP , Villagers petition to reopen Sterlite factory: Kanimozhi MP
× RELATED தூத்துக்குடிக்கு உங்கள் அன்பை தேடி மீண்டும் வந்திருக்கிறேன்