உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகளை கண்டித்து புதுவையில் நாளை முழு அடைப்பு: காங்., திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

புதுச்சேரி: உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகளை கண்டித்து புதுவையில் நாளை(11ம் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்., திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.விசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மதிமுக மாநில பொறுப்பாளர் கபிரியேல் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து கூட்டணி கட்சியினர் தெரிவித்ததாவது:

புதுச்சேரியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறைகளில் மாபெரும் குளறுபடிகள் நடந்திருக்கின்றன. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. தொகுதிகளுக்கான இட ஒதுக்கீடு உள்ள குளறுபடிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் வாதங்கள், புதுச்சேரி அரசும் மாநில தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள், பழைய நிலையை விட மேலும் அதிகமான குளறுபடிகளை உருவாக்கியிருக்கிறது.குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளை பறித்துள்ளனர். இந்த செயலால் புதுச்சேரியை ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்திற்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் மாபெரும் துரோகம் செய்திருக்கிறது. ஆகவே பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்திற்கான இட ஒதுக்கீடுகளுடன், அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல், அனைத்து குளறுபடிகளையும் சரிசெய்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்க கோரியும், புதுச்சேரி மக்களின் அடிப்படை ஜனநாயக அதிகாரத்தை நிலைநாட்டிட கோரியும், நாளை( 11ம் தேதி) திங்கட்கிழமை  புதுச்சேரி மாநிலத்தில், முழு அடைப்பு போராட்டத்தை நடத்திட மதச்சார்பற்ற முற்போக்கு அணியின் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Related Stories: