×

நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்பட்ட சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனர் அலுவலகங்களுக்கான காவல் நிலையங்கள் பிரிப்பு

சென்னை: நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்பட்ட சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கான காவல் நிலையங்களின் எல்லைகளை பிரித்து தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் துறை ஒரு கமிஷனர், 4 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள், மத்திய குற்றப்பிரிவு, நிர்வாகம் என 28 துணை கமிஷனர்கள் தலைமையில் 137 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் இயங்கி வந்தது. நிர்வாக வசதிக்காகவும், மாநகராட்சிக்கு ஒரு காவல் ஆணையர் அலுவலகம் என்ற வகையில் 3 ஆக தமிழக அரசு பிரித்து உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,  ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சிறப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதைதொடர்ந்து 3 மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் காவல் நிலையங்கள் எவை என்று பிரித்து பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் கட்டுப்பாட்டில் அதாவது சென்னை மாவட்டத்தில் பூக்கடை காவல் நிலையம் முதல் ராயிலா நகர் காவல் நிலையங்கள் வரை மொத்தம் 104 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில், பால் பண்ணை, செங்குன்றம், மணலி, சாந்தாங்காடு, மணலி புதுநகர், எண்ணூர் என சென்னை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் விலவங்காடு, செவ்வாய்பேட்டை, சோழவரம், மீன்சூர், காட்டூர் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் என 25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் தாம்பரம், குரோம்பேட்டை, கானாத்தூர் என சென்னை மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம், மணிமங்கலம் என 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tambaram ,Avadi , Commissioner, Police Stations, Separation
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!