×

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் 2ம் சுற்றில் மெட்வடேவ், பிளிஸ்கோவா வெற்றி

இண்டியன்வெல்ஸ்: பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா உட்பட முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் 2ம் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவுடன், அமெரிக்க வீரர் மெக்கன்சி மெக்டொனால்ட் மோதினார். இதில் மெட்வடேவ் 6-4, 6-2 என நேர் செட்களில் மெக்டொனால்டை வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் முன்னணி வீரர்களான தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ், அமெரிக்காவின் டாமி பால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் மற்றும் நார்வேயின் இளம் பீரர் காஸ்பர் ரூட் ஆகியோரும் 2ம் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், போலந்தின் மக்டாலினா பிரெச்சும் மோதினர். இதில் முதல் செட்டை 7-5 என போராடி கைப்பற்றிய பிளிஸ்கோவா, 2ம் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி மக்டாலினா பிரெச்சை வீழ்த்தினார். மற்றொரு 2ம் சுற்றுப் போட்டியில் ஜெர்மனியின் முன்னணி வீராங்கனை ஆங்கிலிக் கெர்பர், செக். குடியரசின் கேடரினா சினியாகோவாவை கடும் போராட்டத்திற்கு பின்னர் 6-1, 6-7, 7-5 என 3 செட்களில் வீழ்த்தினார்.அமெரிக்க வீராங்கனைகள் டேனியல் கோலின்ஸ், கோகோ கவுஃப், செக்.குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, ஸ்பெயினின் பாவ்லா படோசா ஆகியோரும் 2சுற்றில் வெற்றி பெற்றும் 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Medvedev ,Bliskova ,BNP Baribas Open Tennis , BNP Baribas, Open Tennis, Medvedev, Bliskova win
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்