×

உலக பறவைகள் தினத்தை முன்னிட்டு பறவைகளை ஆவணப்படுத்தும் நிகழ்வு: மாணவர்கள் பங்கேற்பு

மேலூர்: உலக பறவைகள் தினத்தை முன்னிட்டு பறவை ஆர்வலர்கள் கலந்து கொண்ட பறவைகள் காணுதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளை,மதுரை அமெரிக்கன் கல்லூரியின் கிரீன் கிளப் இணைந்து பறவைகள் காணுதல் நிகழ்ச்சி, மதுரை கரிசல்குளம் கண்மாய் மற்றும் அவனியாபுரம் கண்மாயில் நேற்று நடந்தது. இதனை மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளையின் மதுரை ஒருங்கிணைப்பாளர் அகில் ரிஷி ராஜசேகரன்,அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் ஒருங்கிணைத்தனர். மேலூர் அரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்பு சங்க தலைவர் ரவிச்சந்திரன், மூத்த பறவை ஆர்வலர் பத்ரிநாராயணன், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பல்வேறு பறவை இனங்களை கண்டறிந்து, அவற்றின் தனித்துவம் மற்றும் பழக்கங்கள் ஆவண படுத்தப்பட்டது.

தாழை கோழி, நீலத்தாழை கோழி, நாமக்கோழி, நீர்காகம், மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, செந்நாரை, புள்ளிமூக்கு வாத்து, சீழ்க்கைச் சிறகி, பாம்புதாரா, கதிர்குருவி, பனை உழவாரன், அன்றில், சிவப்பு மூக்கு ஆள்காட்டி போன்ற பறவைகளையும் வலசை வந்த பறவைகளான நீலச் சிறகி, தகைவிலான், பழுப்பு கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி ஆகிய பறவைகளையும் பறவை காணுதல் நிகழ்ச்சி கண்டு களிக்கப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பறவைகளின் வசிப்பிடமாக உள்ள கரிசல்குளம் கண்மாயில் குப்பைகள் கொட்டப்படுவதும், சாக்கடை நீர் கலப்பதும், பறவைகளை அழிக்கும் செயலாக உள்ளதாகவும், கண்மாயை இவற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளை, மதுரையில் 4 கண்மாய்களை தேர்வு செய்து அங்கு வரும் வலசை பறவைகளை ஆவணப்படுத்தி வருகிறது. இப்பணி மேலும் 6 மாதத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.


Tags : World Bird Day , World Birds Day
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...