×

விரைவில் வருகிறேன், எல்லாரையும் சந்திக்கிறேன்; கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட பார்த்து கொண்டிருக்க முடியாது : சசிகலா

சென்னை: விரைவில் வருகிறேன், எல்லாரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள் என சசிகலா தொண்டர்கள் கூறியுள்ளார். தலைமையில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட பார்த்து கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் என கூறினார். அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். நேரடி அரசியலில் சசிகலா மீண்டும் வர உள்ளதாக அறிவித்துள்ளார். அவரின் திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலத்தை நிறைவு செய்த சசிகலா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். பின்னர், தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். இந்தநிலையில், கடந்த மார்ச் 3ம் தேதி, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக திடீரென அறிவித்தார். சசிகலாவின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், பல மாதங்களாக அமைதி காத்துவந்த சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆடியோ அரசியலை மேற்கொண்டு வந்தார். மாவட்டங்கள் தோறும் உள்ள தனது ஆதரவாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார்.

இந்தநிலையில், விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள் என சசிகலா அறிவித்துள்ளார். இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளைகள் தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்கமாட்டார். இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பார்க்கமாட்டார். அதனையெல்லாம் பார்த்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் நம் பிள்ளைகள் தான். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.


Tags : Sasikala , Coming soon, see you, Sasikala
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!