தஞ்சை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் சிசு 30 மணி நேரத்தில் மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு

பட்டுக்கோட்டை: தஞ்சை ஜி.ஹெச்சில் கடத்தப்பட்ட பெண் சிசுவை 30 மணிநேரத்தில் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (24). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(22). கடந்த ஓராண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமிக்கு, கடந்த 5ம் தேதி தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை அதே வார்டில் இருந்த ஒரு பெண், குழந்தையின் தாய்க்கு உதவி செய்வது போல் நடித்து ஒரு கட்டப்பையில் குழந்தையை வைத்து கடத்தி சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை அண்ணாநகரில் ஒரு வீட்டில் கடத்தப்பட்ட குழந்தையுடன் பெண் தங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று பட்டுக்கோட்டை சென்றனர். அப்போது அண்ணாநகரில் ஒரு வீட்டில் விஜி என்பவர், கடத்தப்பட்ட குழந்தையை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், கடத்தப்பட்ட பெண் குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர் குழந்தையை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இங்குபெட்டரில் வைத்து முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து டாக்டர்கள் உதவியுடன் போலீசார் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மருத்துவமனையில் இருந்த பெற்றோரிடம் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விஜியை கைது செய்த தனிப்படை போலீசார் தஞ்சாவூருக்கு கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3வது கணவரிடம் பணம் பறிக்க குழந்தையை கடத்தியது அம்பலம் இதுகுறித்து எஸ்பி ரவளிபிரியா அளித்த பேட்டி: தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 3தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் மற்றொரு தனிப்படை போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை கடத்திய பெண், ஒரு மெடிக்கல் ஷாப்பில் குழந்தைக்காக டயாபர் தள்ளுபடி கூப்பன் கொடுத்து வாங்கியுள்ளார். அதிலிருந்த செல்போன் நம்பரை வைத்து குழந்தையை கடத்தியவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜி (37) என்பவர் கண்டறியப்பட்டது. தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று விஜியை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டு வந்தனர்.

குழந்தை கடத்தப்பட்ட 30 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு விஜியை கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது. குழந்தையை கடத்திய விஜி, தனது 3வது கணவரிடம் இருந்து சொத்துக்களை வாங்குவதற்காக இந்த குழந்தை தனக்கு பிறந்தது என்று கூறுவதற்காக கடத்தி சென்றுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை கடத்தல் சம்பவத்திற்கும், விஜியின் மூன்றாவது கணவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. குழந்தையை கடத்துவதற்கு முன் அவரது அம்மாவிற்கு உதவுவது போல் நடித்து இந்த செயலை அவர் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>