×

கிருஷ்ணகிரியில் பணம் இரட்டிப்பு மோசடி: கட்டுக்கட்டாக 2ஆயிரம் கள்ளநோட்டு பறிமுதல்: 11 பேர் கும்பல் சுற்றிவளைப்பு; 5 கார்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்ட கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த 11 பேரை, போலீசார் நள்ளிரவில் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ₹4.66 கோடிக்கு ₹2 ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டுகள், 5 கார்களை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகேயுள்ள தனியார் ஓட்டல் அருகே, நேற்று முன்தினம் இரவு 10 பேர் கொண்ட கும்பல் தங்களின் கார்களை நிறுத்திக்கொண்டு, நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார், அந்த கும்பலை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த 5 கார்களில், நகர் பகுதி முழுவதும் ஆங்காங்கே சுற்றி விட்டு, மீண்டும் அதே ஓட்டல் அருகே ஆஜராகினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது மேலும் சந்தேகம் வலுத்தது. இதனிடையே, 2வது முறையாக அந்த கும்பல் நகர் பகுதி முழுவதும் கார்களில் சுற்றி விட்டு, அந்த ஓட்டல் அருகே வந்த போது, 11 பேர் கும்பலையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி அவதானப்பட்டியை சேர்ந்த மகி, ராயக்கோட்டை சங்கர், கேரளா ஜோஸ், ஈரோடு முருகேசன், காவேரிப்பட்டணம் குறும்பட்டி நாகராஜ் உள்பட 11 பேர் என்பது தெரியவந்தது. இதில், மகி என்பவர் ராயக்கோட்டை சங்கரின் காருக்கு டிரைவராக இருந்துள்ளார். சங்கர் ராயக்கோட்டை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதனிடையே, போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், 11 பேரையும் தீவிர சோதனை செய்தனர். அதில், ஒரு நபரின் பேண்ட் பாக்கெட்டில் லாட்ஜ் அறையின் சாவி இருந்தது. இதையடுத்து, போலீசார் அந்த கும்பலை அழைத்துக் கொண்டு லாட்ஜ் அறைக்கு சென்றனர். அப்போது, அந்த அறையில் யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கப்பட்டுள்ளது? எவ்வளவு கொடுத்துள்ளோம் என்பதற்கான டாக்குமெண்ட்டுகள் இருந்தது. அதில், காரைக்குடி 5 லட்சம், ஆந்திரா 3 லட்சம் என பல்வேறு விபரங்கள் அடங்கியிருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், அந்த கும்பலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர்களிடம் இருந்த செல்போனில் இருந்த வீடியோ ஒன்று கைப்பற்றட்டது. அந்த வீடியோவில், பணம் இரட்டிப்பு செய்து கொடுப்பதாகவும், பணத்தை கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருப்பது போன்றும், மக்களின் ஆசையை தூண்டும் வகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது, பணம் இரட்டிப்பாக கொடுக்கப்படும் என அந்த கும்பல்  செல்போனில் தகவல்கள் பரிமாறும். அதனை நம்பி அவர்களிடம் பேசும் நபர்களிடம், தங்களிடம் கட்டுக்கட்டாக பணம் உள்ளது என அந்த வீடியோவை அனுப்பி வைப்பார்கள் என்பதும் தெரியவந்தது. இதனிடையே, அவர்கள் வீடியோவில் காண்பிக்கும் பணம் அனைத்தும், ₹2 ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த டாக்குமெண்டை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சங்கரின் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு நள்ளிரவில் சென்று சோதனை செய்தனர். அங்கு கட்டுக்கட்டாக இருந்த ₹4 கோடியே 66 லட்சம் மதிப்பிலான ₹2 ஆயிரம் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கும்பலிடம் இருந்து 5 கார்களும், 2 டூவீலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், 11 பேரும் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் சிக்கிய சங்கர் என்பவர், ஏற்கனவே பணம் இரட்டிப்பு மோசடியில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Krishnagiri , Krishnagiri, fraud, counterfeiting
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்