காரியாபட்டி அருகே இரண்டாயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி ஓடுகள் கண்டுபிடிப்பு

காரியாபட்டி: காரியாபட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி ஓடுகளை கண்டுபிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே  கிழவனேரியில் முதுமக்கள் தாழிகள் அதிகமாக இருப்பதாக, வரலாற்று ஆர்வலர் பார்த்திபக்கண்ணன் அளித்த தகவல்படி, முனைவர் பட்ட ஆய்வு மாணவர் தாமரைக்கண்ணன், பாண்டிய நாடு பண்பட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் அருப்புக்கோட்டை ஸ்ரீதர், மதுரை அருண்சந்திரன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கிழவனேரி கிராமத்தில் ஊரின் மேற்கு பகுதியில் பெருஊருணி என்னும் பெரிய நீர்நிலை உள்ளது. இதன் அருகே, சிறு ஓடையை அடுத்து மிகப்பெரிய காட்டுபகுதி உள்ளது. இப்பகுதியில்,  மூதாதையரின் வரலாற்றை கூறும் தொல்லியல் எச்சங்கள் அதிகமாக கிடைத்துள்ளன. இந்த பகுதியில் 2 முதல் 3 கி.மீ சுற்றளவிற்கு முதுமக்கள் தாழியின் ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. பெருமழையில் ஏற்பட்ட மண் அரிப்பால், முழுமையாக வெளியே தெரிந்த ஒரு முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து பார்த்தபோது, நமது மூதாதையரின் முழுமையான ஒரு பல்லும் முற்றிலும் சிதைந்த எலும்புகளும் கிடைத்துள்ளன.

மேலும், உள்ளே  ஆறு சிறு மண்முட்டிகள் காணப்பட்டன. இதனுடன் மண்ணாலான உடைந்த தட்டின் சிறு பகுதிகள் காணப்பட்டன.  இறந்தவர்கள் ஒரு நாள் உயிர் பிழைப்பார்கள் என கருதி தாழியின் உள்ளே உடலோடு வைக்கப்பட்ட சிறு மண்பாண்டங்களில் உணவும், நீரும், நீர் அருந்த சிறு குடுவையும், உணவு அருந்த சிறுதட்டும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தாழியின் வாய்ப்பகுதி இரண்டரை இஞ்ச் தடிமனிலும் உள்ளே காணப்படும் சிறு குடுவைகள் முறையே கால், அரை, முக்கால், ஒன்று இஞ்ச் தடிமனில் காணப்படுகிறது. ஓடுகள் கருப்பு-சிவப்பு வண்ணங்களில் உள்ளன. ஓடுகளின் மேற்புறத்தில் அழகிய வேலைப்பாடு காணப்படுகிறது. பழங்காலத்தில் ஒருவர் இறந்த பின், அவரது உடலை அல்லது எலும்புகளை, அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்து புதைப்பது வழக்கம். இந்த தாழிகள் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்க இரும்பு கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இவ்விடத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டால் இன்னும் நிறைய தகவல்கள் வெளிப்படும். இவ்வாறு கூறினர்.

Related Stories:

More
>