×

டெல்டாவில் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை: மயிலாடுதுறையில் 100 கிராமங்கள் இருளில் மூழ்கின

திருச்சி: இடி, மின்னலுடன் டெல்டாவில் விடிய விடிய கனமழை பெய்ததால் மயிலாடுதுறையில் 100 கிராமங்கள் இருளில் மூழ்கின. தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து வருகிறது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுகை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவில் இருந்து விடிய விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், உட்கிராமங்களிலும் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு மேல் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழை சுமார் 1 மணி நேரமாக கொட்டித்தீர்த்தது.
பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. இரவில் விட்டு, விட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சியில் நேற்று காலை 8 மணி வரை தூறல் மழை நீடித்தது. கடலில் பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யம் மற்றும் அருகில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த 2,000 மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

கரூர் ஜவகர்பஜார், பழைய பை-பாஸ் சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, தலைமை தபால் நிலையம், ஆசாத் ரோடு, பழைய திண்டுக்கல் ரோடு, சுங்ககேட் பஸ்நிறுத்தம் உள்ளிட்ட கரூரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. பழைய பை-பாஸ் சாலையில் குளம்போல தேங்கிய மழைநீரில் சென்ற பஸ்சில் மழைநீர் புகுந்ததால் பஸ் பழுதடைந்தது. இதனால் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் குறுக்கு சாலைகள் வழியாக வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர். அந்த வழியாக வந்த திண்டுக்கல் செல்லும் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் ஜீப் மீது மோதி இழுத்து சென்று சாலை நடுவே அமைந்துள்ள தடுப்பில் மோதி நின்றது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற ஒரு பெண் காயம் அடைந்தார்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலப்புதூர் ரயில் பாலத்தில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். உப்பிலியாபுரம் அருகே பி.மேட்டூர் வடக்கு வீதியில் உள்ள நாயக்கர் தெருவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதில் 2 வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சந்தப்படுகை, திட்டுப்படுகை, நாவல் படுகை, அனுமந்தபுரம், சொதியகுடி, ஆச்சாள்புரம், அளக்குடி, கோதண்டபுரம், காட்டூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு காற்றுடன் மிதமான மழை பெய்ய ஆரம்பித்து, தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணி வரை பெய்த மழை பின்னர் மீண்டும் நேற்று காலை 7 மணியளவில் தூரல் மழை இருந்தது. நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை தொடர்ந்து கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். நெல்லில் அதிகம் ஈரப்பதம் உள்ளதால் சாலைகளில் காயவைத்து பின்னர் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் பல பகுதிகளில் நெற்கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் தற்போதைய மழையால் வயலில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. நேற்றும் திருவாரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இதேபோன்று மாலையிலும் மிதமான மழை திருவாரூர், நன்னிலம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பெய்தது. மாவட்டத்தில் மழையளவு நேற்று காலை 6 மணி வரையில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): திருவாரூர் 39.4, திருச்சி டவுன் 34, பெரம்பலூர் 66, கரூர் 99

Tags : Delta ,Mayiladuthurai , Delta, Vidya Vidya Thunder, Lightning, Heavy rain
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!