ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: வைகோ உறுதி

திருவேங்கடம்: தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், குருவிகுளம் ஒன்றியத்தில் 2வது கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இங்குள்ள கலிங்கப்பட்டி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி வாக்களித்தார். அவரது சகோதரர்  வை.ரவிச்சந்திரன், வைகோவின் மகன் துரை வையாபுரி மற்றும் குடும்பத்தினர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.  பின்னர் வைகோ அளித்த பேட்டி: எந்தாண்டும் இல்லாத அளவில் இந்தாண்டு ஒற்றுமையுடன் எங்கள் ஊர் தேர்தல் நடந்தது. அதற்கு காரணம் எனது மகன் துரை வையாபுரி. அனைத்து மக்களையும் அரவணைத்து ஒற்றுமையுடன் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

அவர், அரசியலுக்கு வருவதில் எனக்கு துளியளவும் விருப்பமில்லை. நான் 56 ஆண்டுகளில் பல ஆயிரம் கிமீ நடைபயணமாகவும், ஐந்தரை வருடங்கள் சிறைவாசம் மூலம்  மிகுந்த கஷ்டத்தை அனுபவித்துள்ளேன். அந்த கஷ்டத்தை அவர் அனுபவிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.  ஆனாலும் வரும் 20ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர்  அரசியலுக்கு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும். நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். உத்தரபிரதேசத்தில் விவசாயிகளை கொன்றது, மிகுந்த வேதனையானது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: