கிருஷ்ணகிரியில் பணம் இரட்டிப்பு மோசடி.! ரூ.4.66 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டு பறிமுதல்: 11 பேர் கும்பல் சிக்கியது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டல் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு 10 பேர் கொண்ட கும்பல் கார்களை நிறுத்தி நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், அந்த கும்பலை ரகசியமாக கண்காணித்தனர்.  அப்போது அவர்கள் 5 கார்களில், நகர் பகுதி முழுவதும் சுற்றி விட்டு, மீண்டும் அதே ஓட்டல் அருகே ஆஜராகினர். பின்னர், 2வது முறையாக அந்த கும்பல் நகர் பகுதி முழுவதும் கார்களில் சுற்றி விட்டு, திரும்பி வரவே அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி அவதானப்பட்டியை சேர்ந்த மகி, ராயக்கோட்டை சங்கர், கேரளா ஜோஸ், ஈரோடு முருகேசன், காவேரிப்பட்டணம் குறும்பட்டி நாகராஜ் உள்பட 11 பேர் என்பது தெரியவந்தது. இதில், மகி என்பவர் ராயக்கோட்டை சங்கரின் காருக்கு டிரைவராக இருந்துள்ளார்.

சங்கர் ராயக்கோட்டை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், 11 பேரையும் தீவிர சோதனை செய்தனர். போலீசார், அந்த கும்பலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்த செல்போனில் இருந்த வீடியோவில், பணம் இரட்டிப்பு செய்து கொடுப்பதாகவும், பணத்தை கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருப்பது போன்றும், மக்களின் ஆசையை தூண்டும் வகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது, பணம் இரட்டிப்பாக கொடுக்கப்படும் என அந்த கும்பல்  செல்போனில் தகவல்கள் பரிமாறும். அதனை நம்பி அவர்களிடம் தங்களிடம் உள்ள ரூ.2 ஆயிரம் கலர் ஜெராக்ஸ் கள்ள நோட்டுகளை தருவதும் தெரியவந்தது. பின்னர் சங்கரின் வீட்டுக்கு  சென்று சோதனை செய்தனர். அங்கு கட்டுக்கட்டாக இருந்த ரூ.4 கோடியே 66 லட்சம் மதிப்பிலான ரூ.2 ஆயிரம் கலர் ஜெராக்ஸ் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More