×

மின்னல் தாக்கியதில் சுவிட்ச்போர்டு வெடித்தது புகை மண்டலத்தில் சிக்கி 7 தேர்தல் அலுவலர்கள் மயக்கம்: சின்னசேலம் அருகே பரபரப்பு

சின்னசேலம்: சின்னசேலம் அருகே வாக்குப்பதிவு மையத்தில் மின்னல் தாக்கியதில் சுவிட்ச்போர்டு வெடித்து புகைமண்டலத்தில் சிக்கி தேர்தல் அலுவலர்கள் 7 பேர் மயக்கம் அடைந்தனர். சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் கூகையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரபயங்கரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 157வது வாக்குசாவடியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. சிறுவலூர் ஆறுமுகம்(58), நமச்சிவாயபுரம் தனபால்(44), திருக்கோவிலூர் அத்திப்பாக்கம் சிலம்பரசன்(33), அசகளத்தூர் ஆறுமுகம்(54), தியாகதுருகம் தமிழரசன்(40), சின்னசேலம் மணி(30), கடுவனூர் ஜெயராமன்(52) உள்ளிட்ட 8 பேர் தேர்தல் ஆயத்த பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டு வந்தனர்.

இரவில் வேலை முடிந்து ஒருவர் மட்டும் வெளியில் தங்கினார். மற்ற 7 பேரும் வாக்குச்சாவடியில் தங்கினர். இடியுடன் மழை பெய்து திடீரென மின்னல் தாக்கியதில் பள்ளி அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவால், வாக்குச்சாவடியில் இருந்த சுவிட்ச் போர்டுகள் வெடித்து சிதறியது.
இதில் ஏற்பட்ட கரும்புகையில் சிக்கிய 7 அலுவலர்களும் மயக்கமடைந்தனர். அவர்கள் கை, கால்களில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்பட்டது.  தகவல் அறிந்து சின்னசேலம் தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல் ஆகியோர் வந்து அலுவலர்களை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வாக்குச்சீட்டுகள் சேதமாகாததால் தடையின்றி நேற்று தேர்தல் நடந்தது.


Tags : Switchboard explodes due to lightning strike 7 election officials trapped in smoke zone
× RELATED தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது