திருச்சி அருகே தாயின் அழுகிய உடலை வைத்து ஒரு வாரம் ஜெபம் செய்த மகள்கள்: கைப்பற்ற வந்த போலீசாருடன் வாக்குவாதம்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் மேரி (75). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர், திருமணமாகாத தனது மகள்கள் ஜெசிந்தா(43), ஜெயந்தி(40) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மேரியை பார்க்க புதுச்சேரியை சேர்ந்த உறவினர் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன் வந்தார். அங்கு இறந்துபோன மேரியின் உடலை வைத்து 2 மகள்களும் ஜெபம் செய்வதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். மேரியின் உடலை உடனே அடக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதற்கு அவர்கள் தாயை உயிர்ப்பிக்கவைக்க ெஜபம் செய்கிறோம். நீங்கள் வெளியேறுங்கள் என கூறி வலுக்கட்டாயமாக வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டனர். மீண்டும் இருவரும் ஜெபத்தை தொடர்ந்தனர்.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள், மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு அங்கு சென்ற போலீசார், உள்ளே சென்று பார்த்தபோது, இறந்து ஒரு வாரம் ஆனதால் அழுகிய நிலையில் இருந்த மேரியின் உடல் மீது பைபிளை வைத்து ஜெபம் செய்தது தெரிய வந்தது. மகள்களின் எதிர்ப்பை மீறி போலீசார், மேரியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குவந்த இரண்டு மகள்களும், எங்கள் தாய் மேரி இறக்கவில்லை. நாங்கள் ஜெபம் செய்தால் அவர் உயிர்த்தெழுவார் என கூறி டாக்டர்களிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

More
>