மோசமான வானிலை.! ஐதராபாத் விமானம் தாமதம்: பயணிகள் அவதி

சென்னை: ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக திருப்பதியிலிருந்து ஐதராபாத் சென்ற விமானம் சென்னைக்கு திரும்பி வந்தது. அதேபோல் சென்னை-ஐதராபாத்-சென்னை விமானங்கள் தாமதமானதால் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பயணிகள் அவதிப்பட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மோசமான வானிலை காரணமாக திருப்பதியிலிருந்து 69 பயணிகளுடன்  ஐதராபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து தரையிறங்கியது. அங்கு வானிலை சீரடைந்த பின்பு நேற்று அதிகாலை ஒரு மணிக்கு மீண்டும் சென்னையிலிருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றது.

அதேபோல், ஐதராபாத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தது. அந்த விமானத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 169 பயணிகள் வந்தனர். மேலும் சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு 129 பயணிகளுடன் ஐதராபாத் செல்ல வேண்டிய ஏர்ஏசியா விமானம் 2 மணிநேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: