×

சங்கல்ப் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் கோலப்பன்சேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சங்கல்ப் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் திறந்து வைத்தார். சங்கல்ப் பள்ளி சுமார் 20 ஆண்டுகளாக சிறப்பு குழந்தைகள் வாழ்வின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 200 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்திடும் வகையில் புதிய சங்கல்ப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பள்ளியில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிசியோதரபி சிகிச்சை, பேச்சு பயிற்சி சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், அந்த குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்திடும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி மூலம்  நகை தயாரிப்பு, பரிசு பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், டேட்டா என்டரி, சோப்பு தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, முகக்கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, சங்கல்ப் பள்ளியை சிறப்பான முறையில் நடத்தி வருவதற்காக அப்பள்ளி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி, வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் இறையன்பு, சங்கல்ப் நிறுவன அறங்காவலர் டாக்டர் முல்லாசரி அஜித் சங்கர்தாஸ், இயக்குநர்கள் சுபாஷினி ராவ், லட்சுமி கிருஷ்ணகுமார், சுலதா அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Sankalp Special School for Children ,Principal ,MK Stalin , Sankalp Special School for Children: Opened by Principal MK Stalin
× RELATED அதிமுக உறுப்பினர்களை அவையில்...