×

உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை: காங்கிரஸ் செயற்குழு 16ம் தேதி கூடுகிறது

புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி கூட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், உட்கட்சி தேர்தல் குறித்தும், விரைவில் நடக்க உள்ள மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. பஞ்சாப்பில் சமீபத்தில் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால், அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் போது, ‘கட்சிக்கு முழுநேர தலைவர் இல்லாததால், யார் முடிவெடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை’ என ஜி-23 குழுவின் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் குற்றம்சாட்டினார்.

அதோடு, செயற்குழு கூட்டத்தை விரைவில் கூட்டும்படி, இந்த  குழுவை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில், வரும் 16ம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காலை 10 மணிக்கு செயற்குழு  கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்த பிறகு இடைக்கால தலைவராக சோனியா நீடிக்கிறார். எனவே, உட்கட்சி தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்தும், விரைவில் நடக்க உள்ள தேர்தல்கள் குறித்தும் காரிய கமிட்டியில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Tags : Congress , Consultation on by-elections: Congress executive committee meets on the 16th
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...