×

தீவிரவாதிகள் குறிவைத்து கொல்வதால் பீதி.! காஷ்மீரை விட்டு ஓடும் பண்டிட் குடும்பங்கள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இந்துக்கள், சீக்கியர்களை குறிவைத்து கடந்த 5 நாளில் 7 பேரை தீவிரவாதிகள் கொன்ற நிலையில், உயிருக்கு பயந்து பண்டிட் குடும்பங்கள் புலம்பெயரத் தொடங்கி உள்ளனர். 1990ம் ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்த பாதுகாப்பற்ற சூழல் மீண்டும் திரும்பியிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
காஷ்மீரில் கடந்த 5 நாளில் பொது இடத்தில் அப்பாவி மக்கள் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதில் 4 பேர் இந்து, சீக்கியர்களான சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். 6 கொலைகள் தலைநகர் ஸ்ரீநகரில் நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நகரின் ஈத்கா பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தீபக் சந்த் என்பவரும், தலைமை ஆசிரியர் சுபிந்தர் கவுர் என்பவரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக, முஸ்லிம் ஆசிரியர்களை விட்டு விட்டு, இவர்கள் 2 பேரை மட்டும் பள்ளியில் இருந்து வெளியே இழுத்து வந்து சுட்டு கொன்றனர். இந்த கொலைகள், காஷ்மீரி இந்துக்களான பண்டிட் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  எனவே, உயிருக்கு பயந்து பண்டிட் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பலர் காஷ்மீரை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, பத்காம் மாவட்டத்தை சேர்ந்த ஷேக்போரா பகுதியிலிருந்து 12 பண்டிட் குடும்பத்தினர் வேறு பகுதிக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்துள்ளனர். மேலும், பலரும் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் உயிருக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி உள்ளோம். வேலைக்கு போகாமல் எவ்வளவு நாள் தான் வீட்டில் இருக்க முடியும்? எங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற பல வாக்குறுதியுடன் 2003ல் இங்கு அரசு எங்களை குடியமர்த்தியது. ஆனால், கடந்த 1990ல் காஷ்மீரில் துப்பாக்கி சண்டை தொடங்கியதில் இருந்த பாதுகாப்பற்ற நிலை, இப்போது மீண்டும் திரும்பி விட்டது. அதனால், வேறு வழியின்றி நாங்கள் வெளியேற வேண்டியதாகி விட்டது,’’ என்றனர். கடந்த 1990ம் ஆண்டுகளில் காஷ்மீரின் சிறுபான்மையினர்களான பண்டிட்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர். இதனால், காஷ்மீரை விட்டு வெளியேறிய அவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி மீண்டும் குடியமர்த்தியது. ஆனால், தற்போது காஷ்மீரி பண்டிட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு தவறி விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Pandit ,Kashmir , Panic as terrorists target and kill.! Pandit families fleeing Kashmir
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...