×

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்தம் உருவாகிறது.! தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு,  அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள்  மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன்  கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

11ம் தேதி (நாளை) நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர்,  திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும்  டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும். 12, 13ம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு,  கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி. கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும்  புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான  மழையும் பெய்ய கூடும்.

 சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச  வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர், அகரம் சீகூர் (பெரம்பலூர்), முஷ்ணத்தில்  (கடலூர்) தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 10ம் தேதி (இன்று) மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இன்று மற்றும் நாளை தெற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Bay of Bengal ,Tamil Nadu ,Meteorological Department , New barometric pressure is developing in the Bay of Bengal today! Heavy rains in Tamil Nadu for 4 days: Meteorological Department warns
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...