×

தமிழ் வளர்ச்சித்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: 2 ஆசிரியைகள் கைது

சென்னை: தமிழ் வளர்ச்சி துறையில் வேலை வாங்கி தருவதாக, ரூ.5 லட்சம் மோசடி செய்த இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ரேணியல். போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா கார்மல் (43). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றுள்ளார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த திருப்பாச்சூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மேகலா (59) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மேகலா, ‘‘உயர் அதிகாரிகளை எனக்கு நன்கு தெரியும். யாருக்காவது வேலை வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள். தமிழ் வளர்ச்சித்துறையில் வேலை வாங்கி தருகிறேன்’’ என கூறியுள்ளார். இதனால் அவரை நம்பிய அனிதா கார்மல், தனக்கு வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளார். இதற்காக இரண்டு தவணையாக 5 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் மேகலா ஏமாற்றி வந்துள்ளார். மேகலாவுக்கு உடந்தையாக கொளத்தூர் விநாயகபுரம் அரசு பள்ளி ஆசிரியை சத்யபிரியா (39) இருந்துள்ளார்.

இதனால் கடந்த 2017ம் ஆண்டு புதுவண்ணாரப்பேட்டை போலீசில் அனிதா கார்மல் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகலா, சத்யபிரியா ஆகியோரை காவல்நிலையம் அழைத்து விசாரித்தனர். அப்போது, அனிதா கார்மலிடம் வாங்கிய பணத்தை கொடுத்துவிடுவதாக போலீசாரிடம் மேகலா கூறியுள்ளார். ஆனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் சென்னை மாநகர கமிஷனரிடம் அனிதா கார்மல் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத்துக்கு உத்தரவிட்டார். அதன்படி அவரது மேற்பார்வையில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி ஆசிரியர்களான மேகலா, சத்யபிரியாவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், ஏற்கனவே பள்ளி கல்வித்துறையில் குளறுபடியில் ஈடுபட்டு மேகலா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Tamil Development Department , Rs 5 lakh scam: 2 teachers arrested for offering jobs in Tamil Development Department
× RELATED கனவு இல்ல திட்டத்தின் கீழ் 10...