×

திருப்போரூர் பகுதியை ஒட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்:  திருப்போரூர் பகுதியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் ஆகிய இடங்களில்  செயல்படுகிறது. தற்போது, வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் அதிகரிக்கும் மின் இணைப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மறைமலைநகர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை இரண்டாக பிரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அலுவலகத்தை சட்டமன்ற தொகுதி தலைமை இடமான திருப்போரூரில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் மின் வழங்கல் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்புத் துறை பயிற்சி மையம், சார் பதிவகம் ஆகியவை அமைந்துள்ளன.

மேலும், திருப்போரூரை ஒட்டியே ஆலத்தூர் சிட்கோ, தண்டரை சிட்கோ, ஒன் ஹப் ஜப்பான் சிட்டி ஆகிய தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. இதையொட்டி, திருப்போரூர் பகுதியில் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை அமைத்தால் பல்வேறு திட்ட அனுமதிகளை பெறுவதற்காக திருப்போரூர் வரும் பொதுமக்களும், தொழிற்துறையினரும் மின்வாரிய பணிகளையும் சேர்த்தே செய்ய முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும், அரசு விருந்தினர் மாளிகை ஆகியவை உள்ளது. இதே பகுதியில், அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது.

இங்கு கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை அருகருகே உள்ளதாலும் திருப்போரூரில் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைந்தால் பொதுமக்கள் எளிதில் பயன்பெற முடியும் என்பது பெரும்பாலான மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது. முக்கிய அலுவலகங்களை போக்குவரத்து வசதி இல்லாத வெவ்வெறு இடங்களில் மாற்றி அமைப்பதால் பல்வேறு திட்ட அனுமதிகளை பெறுவதற்கு பொதுமக்களும் தொழிற்துறையினரும் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். இதற்கு தீர்வு காண்பதற்கு, திருப்போரூரில் அமைப்பதே சிறந்தது என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே, மறைமலைநகர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை இரண்டாக பிரிக்கும்போது திருப்போரூரில் புதிய அலுவலகத்தை அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Electrical Engineer's Office ,Thiruporur , Establishment of Electrical Engineer's Office at Thiruporur: Public Request
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...