×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் களைகட்டிய 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சீட்டில் பெயர், சின்னங்கள் குளறுபடி

செங்கல்பட்டு: தமிழகத்தில்  விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு 2  கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்தது. அதன்படி, கடந்த 6ம் தேதி 9 மாவட்டங்களில் 14,662 பதவிகளுக்கு  முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 74 ஊராட்சி ஒன்றியங்களில்  முதல்கட்டமாக 39 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில், 77.43 சதவீதம்  வாக்குகள் பதிவானது. இதைதொடர்ந்து, 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7  மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை நடந்தது. செங்கல்பட்டு  மாவட்டத்தில் 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 80 ஊராட்சி ஒன்றிய  வார்டு உறுப்பினர்கள், 199 கிராம ஊராட்சி தலைவர்கள், 1449 கிராம ஊராட்சி  வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நேற்று நடந்தது. மொத்தம்  970 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில், பலமணி நேரம்  நின்று வாக்களித்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளை 80 நுண்பார்வையாளர்கள்  தீவிரமாக கண்காணித்தனர்.

மேலும், அந்த வாக்குசாவடிகளில் வீடியோ பதிவுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, அனைத்து  வாக்குச்சாவடிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த  தேர்தலுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து, செங்கல்பட்டு எஸ்பி  விஜயகுமார் கூறுகையில், ‘‘ஊராட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு காலை  தொடங்கியது. தேர்தல் நடந்த 4 ஒன்றியங்களில் 2250 போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர். தேர்தல் பணியில் 11 டிஎஸ்பி மற்றும் போலீசார்  ஈடுபட்டனர். மொத்தம் 52 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதால்,  அங்கு தலா ஒரு எஸ்ஐ, 5 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர். இதுமட்டுமின்றி அதிவிரைவு படைகள் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டன. அசம்பாவித சம்பவங்கள் பற்றி, தகவல் தெரிவிக்க 7200102104 என்ற  உதவி எண் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், தகவல் தெரிவிக்கபட்டவுடன்,  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். எனவே பொதுமக்கள் அமைதியான முறையில்  ஆர்வத்துடன், தயக்கமில்லாமல் வாக்களித்தனர்.’’ என்றார். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. முதல் கட்டமாக கடந்த 6ம் தேததி காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய  ஒன்றியங்களில் வாக்குப்பதிவு முடிந்தது. 2ம் கட்டமாக பெரும்புதூர் ஒன்றியத்தில் 203 வாக்குப்பதிவு மையங்கள், குன்றத்தூர் ஒன்றியத்தில் 398 வாக்குப்பதிவு மையங்கள்,  என மொத்தம் 601 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தின் 66 வாக்குச்சாவடிகள், குன்றத்தூர் ஒன்றியத்தின் 22 (சென்னையை ஒட்டிய பகுதிகளில் 88-) 176 என பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டன. மேலும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 44,387 ஆண்கள், 48,964 பெண்கள், திருநங்கையர் 11 பேர் என 93362 வாக்காளர்கள் உள்ளனர். குன்றத்தூர் ஒன்றியத்தில் 1,34,049 ஆண்கள், 1,38,463 பெண்கள், திருநங்கையர் 41 என 2,72,554 வாக்காளர்கள் உள்ளனர். 2ம் கட்ட தேர்தலில் 5 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 44 பேர், 37 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 213 பேர், 98 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 570 பேர், 738- கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,738 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் பணிக்காக 4,774 அரசு ஊழியர்கள், 1,507 போலீசார் என மொத்தம் 6,281 பேர் பணியமர்த்தப்பட்டனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. மாலை 5 முதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம், பூந்தண்டலம் ஊராட்சி புதுச்சேரி கிராமத்தில் 606 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பூத் எண் 173 (ஏவி) அமைக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடியில், நேற்று காலை ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், வார்டு கவுன்சிலர்களுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பவானி, திமுக சார்பில் மலர்விழி, பாமக சார்பில் வசந்தி ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால், ஒன்றிய கவுன்சிலருக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் செந்தாமரை என்ற பெயரில் விவசாயி சின்னம், ரேகா என்ற பெயரில் உதயசூரியன் சின்னம், ஜெயந்தி என்ற பெயரில் இரட்டை இலை சின்னம் என தவறாக அச்சிடப்பட்டு இருந்தது.

இதை பார்த்த 3 கட்சி வேட்பாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, ஒன்றிய தேர்தல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த வாக்குச்சாவடி மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குச்சீட்டு தரவில்லை. ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. பின்னர், அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டு குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் ஆலோசித்துவிட்டு, ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுமார் 2 மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர், ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த பதவிக்காக வாக்குப்பதிவு இன்று அல்லது நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் நேற்று 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதில், ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கு சங்கர் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு  வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று காலை அங்கு சென்ற தேர்தல் அலுவலர்கள், ஏற்கனவே வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்ட பகுதியில், வாக்குச்சீட்டுகளை கொடுத்தனர். சுமார் 92 வாக்குகள் உள்ள அந்த வார்டில் 50க்கு மேற்பட்டோர் வாக்குப்பதிவு செய்தனர். அப்போது, ஏற்கனவே உறுப்பினரை தேர்வு செய்துவிட்டனர். பிறகு ஏன் தேர்தல் என சிலர் கேள்வி எழுப்பினர். உடனே அதிகாரிகள், அங்கு நடந்த தேர்தலை நிறுத்தி வைத்தனர். பின்னர், உறுப்பினர் தேர்வு செய்யாத வார்டுக்கு, விரைவில் ேதர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு நிலவியது.

குன்றத்தூர்: குன்றத்தூர் ஒன்றியம் கோவூர், சிக்கராயபுரம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிமுதல் மக்கள் காத்திருந்து, தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். ஆண்களைவிட பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
கொரோனா நேரத்தில் சமூக இடைவெளியுடன் வாக்களிக்கவும், நெரிசல் மற்றும் கூட்டத்தை தவிர்க்கவும், எளிதாக வாக்குப்பதிவு செய்யும் வகையில், குன்றத்தூர் ஒன்றியத்தில் மட்டும் 398 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்களிக்க வந்த அனைவருக்கும், பாதுகாப்பு நடவடிக்கையாக சானிடைசர், முகக் கவசம், கையுறை ஆகியவை அனைத்து வாக்குச்சாவடிகள் மையங்களில் வைக்கப்பட்டன.

Tags : Chengalpattu ,Kanchipuram , Chengalpattu, Kanchipuram districts weeding 2nd phase local government election: Name and symbols messed up on the ballot
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...