நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் மாற்றம்: பணியாளர், சட்ட விவகார குழுவின் தலைவராக சுஷில் மோடி நியமனம்

புதுடெல்லி: தேச நலன் சார்ந்த விஷயங்கள், சர்ச்சைக்குரிய மசோதாக்கள் போன்றவற்றை ஆய்வு செய்து ஒன்றிய அரசுக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்கும் முக்கிய பணியை நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இக்குழுக்கள் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 24 நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் மாற்றம் செய்து மாநிலங்களவை தலைமைச் செயலகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. இதில், பணியாளர், சட்டத்துறை நிலைக்குழுவின் தலைவராக சுஷில்குமார் மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பான அறிக்கை அளிக்கும் முக்கிய குழுவாகும். பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரான சுஷில் குமாருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படாததால், முக்கியமான இக்குழுவின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, பி.வில்சன் ஆகியோரும், விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் முந்தைய தலைவராக இருந்த பூபேந்திர யாதவ் ஒன்றிய அமைச்சரானதைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுஷில் மோடிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர்  சசிதரூர் நீடிக்கிறார். பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி வந்த அவரை மாற்ற வேண்டுமென பாஜ எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரசின் ஆனந்த் சர்மா உள்துறை குழுவுக்கும், ஜெய்ராம் ரமேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவுக்கும் தலைவராக நீடிக்கின்றனர். ராகுல் காந்தி பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினராக நீடிக்கிறார்.

Related Stories:

More
>