×

2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

குயின்ஸ்லாந்து, அக்.10: இந்திய மகளிர் அணியுடனான 2வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸி.யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து நடந்த பகல்/இரவு டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும், அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட  டி20 தொடரில் மோதி வருகின்றன. அக்.7ம் தேதி நடந்த  முதல் டி20ல் இந்தியா வலுவான நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் 2வது டி20 ஆட்டம் நேற்று குயின்ஸ்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற  ஆஸி. பந்துவீச்சை தேர்வு செய்தது. நிதானமாக விளையாடிய இந்தியா  20 ஓவர் முடிவில்  9 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது.   பூஜா ஆட்டமிழக்காமல் 37 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

ஹர்மன்பிரீத்  28 ரன் (20 பந்து, 5 பவுண்டரி), தீப்தி சர்மா 16 ரன் (19 பந்து, 1 பவுண்டரி) எடுத்தனர். ஆஸி. தரப்பில் தஹிலா, ஷோபி தலா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய ஆஸி. அணி,   இந்திய  வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில்  திணறியது. அடுத்தடுத்து விக்கெட் வீழ, இந்தியா வெற்றியை நோக்கி நகர்ந்தது. எனினும், பெத் மூனி - தஹிலா மெக்ராத் ஜோடி பொறுப்பாக விளையாடி   ஆட்டத்தின் போக்கை மாற்றினர். மூனி 34 ரன் (36 பந்து, 4 பவுண்டரி) விளாசி வெளியேறினார். ஆஸி. அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு  119 ரன் எடுத்து வெற்றி பெற்றது.  தஹிலா 42 ரன் (33 பந்து , 6 பவுண்டரி),  ஜார்ஜியா 10 ரன்னுடன் (7பந்து, 2பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இந்திய தரப்பில்  ராஜேஸ்வரி 3 விக்கெட், ஷிகா, ஹர்மன்பிரீத், தீப்தி தலா 1 விக்கெட் எடுத்தனர். தஹிலா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். ஆஸி  1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று நடக்கிறது.


Tags : Australia , Australia win 2nd T20 match
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...