சிறையில் இருந்து கொண்டே ரூ.200 கோடி மோசடி: சுகேஷ், மனைவி லீனா பாலை கைது செய்தது அமலாக்கத்துறை

புதுடெல்லி: சிறையில் இருந்தபடி ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ், அவரது மனைவி லீனா மரியா பாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் பல மோசடிகளை அரங்கேற்றியவர். 17 வயதில் இருந்து பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவரை கைது செய்த போலீசார் டெல்லி ரோகிணி சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்தபடியே, திருட்டுத்தனமாக செல்போன் பெற்ற சுகேஷ், தனது கூட்டாளிகள் உதவியுடன், பெரும் தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு, தான்ஒரு அரசு உயர் அதிகாரி எனக்கூறி, சில காரியங்களை செய்து தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் சிறையில் உள்ள சுகேஷையும், அவனது கூட்டாளிகள் 2 பேரையும் சமீபத்தில் கைது செய்தனர். கடந்த ஆகஸ்டில் சென்னையில் உள்ள சுகேஷின் பண்ணை வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை ரூ.82.5 லட்சம் கணக்கில் வராத பணம் மற்றும் 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்தது. இந்த வழக்கில் சுகேஷின் மனைவி லீனா மரியா பாலும் கைதாகி உள்ளார். இந்நிலையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, சிறையில் உள்ள சுகேஷ் மற்றும் அவரது மனைவி லீனாவை நேற்று கைது செய்தது. விரைவில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.

Related Stories: