ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு: ஆதாரங்கள் இருப்பதால்தான் விசாரணை நடத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு.!

புதுடெல்லி: ‘அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்த விவகாரத்தில் உறுதியான ஆதாரம் இருப்பதால் தான் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக.வை சேர்ந்த முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மாறுபட்ட தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் வழங்கியது. இதனால், 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தற்போது அது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட்டில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவில், ‘இது, காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால், உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டது.

இதை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை 3வது நீதிபதி விசாரிக்கலாம். ஆனால், தீர்ப்பு வழங்கக் கூடாது,’ என கூறி, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு போதிய ஆதாரங்கள் உள்ளதால்தான் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. அது நடத்திய சோதனையில், வருமானத்திற்கு அதிகமாக ராஜேந்திர பாலாஜி 73 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்து இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் 3வது நீதிபதி தீர்ப்பை வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருப்பது, வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அதனால், அந்த தடையை  ரத்து செய்ய வேண்டும். 3வது நீதிபதி தீர்ப்பை வெளியிட அனுமதிக்க வேண்டும். ராஜேந்திர பாலாஜியின் மனுவை விசாரிப்பதில் எந்த முகாந்திரமும் இல்லை. அதை தள்ளுபடி செய்ய ேவண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>