தனியாருக்கு தாரை வார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் 100% பங்கையும் விற்க முடிவு: இது ‘ஏர் இந்தியா’ கற்றுத் தந்த பாடம்

புதுடெல்லி: இனி தனியாருக்கு தாரை வார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் எந்த பங்கையும் கைவசம் வைத்துக் கொள்ளாமல் 100 சதவீதத்தையும் துடைத்து விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கு வெற்றிகரமாக ஒன்றிய அரசு விற்றுள்ளது. ஆரம்பத்தில் ஏர் இந்தியாவின் 40 சதவீத பங்கை மட்டுமே விற்க அரசு முடிவு செய்தது. ஆனால், எந்த தனியார் நிறுவனமும் வாங்க முன்வரவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் 100% பங்கையும் விற்க சம்மதித்தது. அதன் மூலம், டாடா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதில், ஏர் இந்தியாவின் ரூ.61,562 கோடி கடனில் ரூ.15,300 கோடி கடனை டாடா ஏற்றுக் கொள்ளும்.

ஒன்றிய அரசுக்கு ரூ.2,700 கோடியை கொடுக்கும். தனியாருக்கு விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு இருந்தாலோ, அதன் வாரியத்தில் அரசு நியமன உறுப்பினர்கள் இருந்தாலோ, அதை தனியார் நிறுவனங்கள் விரும்பாது, அந்த நிறுவனங்களை விலைக்கு வாங்க முன்வராது என்பதை ஏர் இந்தியா விற்பனையின் மூலம் ஒன்றிய அரசு உணர்ந்துள்ளது. எனவே, அடுத்தடுத்து தாரை வார்க்கப்பட உள்ள பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களை விற்கும் போது 100 சதவீத பங்கையும் ஒட்டுமொத்தமாக விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

அதே சமயம், ஏர் இந்தியாவை விற்கும் முன்பாகவே அதன் அசையா சொத்துக்களை விற்கக் கூடாது என்பதில் அரசு தீர்மானமாக இருந்தது. எனவே, அவை தனியாக பிரிக்கப்பட்டன. தற்போது அந்த அசையா சொத்துக்கள் தனியாக விற்கப்படும். இதே பாணியை இனி வரும் பொதுத்துறை நிறுவன தனியார்மயமாக்கல் விஷயங்களிலும் பின்பற்றப்பட இருப்பதாக மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர். ஏர் இந்தியா விற்பனையின் மூலம் தனியார்மயமாக்கலில் பல்வேறு விஷயங்களை ஒன்றிய அரசு உணர்ந்துள்ளதாகவும், எனவே அடுத்தடுத்து குறுகிய காலத்திலேயே பொதுத்துறை நிறுவனங்களை விற்று விட முடியும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories:

More