நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு: டெல்லி இருளில் மூழ்கும் அபாயம்..!

டெல்லி: நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்காவிட்டால் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி பற்றாக்குறை பூதாகரமாக வெடித்துள்ளது. டெல்லியின் மின் தேவையை பூர்த்தி செய்யும் 3 முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு நாளைக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு எஞ்சியுள்ளது. இதனால் டெல்லியில் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நிலக்கரி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் வருங்காலத்தில் இது போன்ற நெருக்கடி ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தட்டுப்பாடு காரணமாக தற்போதே மின் உற்பத்தி குறைந்திருப்பதாக டெல்லி மின்சாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். அதேபோல ஆந்திராவிலும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைந்து பாசன பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அறுவடை சமயத்தில் பாசனம் தடைபடுவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் நெருக்கடியில் இருப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரு மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 முதல் 4 மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

Related Stories:

More
>