குதிரையை தண்ணீர் குடிக்க கட்டாயப்படுத்த முடியாது: விவசாய போராட்டம் குறித்து ஜே.பி.நட்டா கருத்து

புதுடெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘உத்தரபிரதேசத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பமுடியாது. சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை; யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அனைவருக்கும் நீதி கிடைக்கும். இந்த வன்முறைச் சம்பவத்தை உத்தரபிரதேச தேர்தலில் எதிரொலிக்காது. இச்சம்பவத்தை மனித நேயத்திலிருந்து பார்க்க வேண்டும். ஒன்றிய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

பாஜகவோ, அரசோ அதனை ஆதரிக்கவில்லை. நாட்டில் புதிய வடிவிலான எதிர்ப்பு போராட்டம் உருவாகி வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கத் தலைவர்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மேலும், தொடர் பேச்சுவார்த்தைக்காக அரசின் கதவுகள் திறந்தே உள்ளன. விவசாயச் சட்டங்களை 18 மாதங்களுக்கு அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டும், எதற்காக போராட்டம் நடக்கிறது. அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் போது, போராட்டம் எதற்காக நடத்தப்படுகிற? குதிரைகளை தண்ணீருக்கு அருகில் கொண்டு வரலாம்; ஆனால் அவற்றை குடிக்க கட்டாயப்படுத்த முடியாது.

விவசாயிகளின் நலனுக்காக ‘கிசான் சம்மன் நிதி யோஜனா’, ‘கிசான் பசல் பீமா யோஜனா’ மற்றும் விவசாயிகள் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நல்ல எண்ணம் கொண்டவர்களை (விவசாயிகள்), நாங்கள் பாதுகாப்போம். அது எங்களுடைய அரசியல் உரிமை. அனைத்து பிரச்னைகளிலும் அரசியல் செய்பவர்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். அவர்கள் தகுந்த பதிலை அளிப்பார்கள்; நாங்கள் அதற்காக தயாராக இருக்கிறோம்’ என்றார்.

Related Stories: