துபாயில் வரவேற்பை பெறும் மதுரை மல்லி: அசத்தும் தமிழக வியாபாரி

துபாய்: மணக்கும் மல்லிகையின் வாசம் உலகமெங்கும் நேசம் பெறும் என்பதற்கு அடையாளமாக வெளிநாடுகளில் மதுரை மல்லி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி நகரங்களில் மதுரை மல்லிகை தமிழகத்தில்  கிடைப்பது போன்று நாள்தோறும் விற்பனைக்கு வருகிறது. இந்தியர்கள் மட்டுமில்லாது அரபு நாடுகளை சேர்ந்தவர்களும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கான அலங்காரங்கள், வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மதுரை மல்லிகையை  அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

 மல்லிகை மலர்களை மதுரையிலிருந்து அதிகளவில் துபாய்க்கு இறக்குமதி செய்து விற்பனை செய்து வரும் தமிழகத்தை சேர்ந்த பெருமாள்,  32 ஆண்டுகளுக்கு முன் துபாயில் ஒரு மலர் கடை தொடங்கி தற்போது 189 கிளைகளை நடத்தி வருகிறார். 2017ல் மதுரை விமான நிலையத்தில் மதுரை-துபாய் சர்வதேச சரக்கு போக்குவரத்தை தொடங்கிய போது முதல் சரக்காக மதுரை மல்லி உள்ளிட்ட 300 கிலோ மலர்களை துபாய்க்கு இவர் இறக்குமதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலிருந்து யுஏஇ வரும் இந்த மல்லி இரண்டு நாட்கள் வரை வாடாமல் இருக்கும். ஆனால் அதற்குள் விற்று தீர்ந்து விடுகிறது என்கிறார் பெருமாள். இது குறித்து மலர் வியாபாரி பெருமாள் கூறியதாவது:  ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நாளொன்றுக்கு மதுரை மல்லி மட்டும் 500 கிலோ யுஏஇக்கு இறக்குமதி செய்து வருகிறேன். சீசன் சமயத்தில் இது அதிகரிக்கும். இது தவிர்த்து மற்ற மலர்களும் மலர்கள் இறக்குமதி செய்கிறேன். மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதலாக விமானங்களை இயக்கினால் மற்ற விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.

மதுரையிலிருந்தே நேரடியாக இறக்குமதி செய்து கொள்ளலாம். இதன்மூலம்  தென்மாவட்டங்களில் தொழில் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் மதுரை மல்லிக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் வரவேற்பு உள்ளது. எனவே தமிழக அரசும், இந்திய அரசும் இணைந்து மதுரை விமான நிலையத்தை மேம்படுத்தி கூடுதல் விமானங்களை இயக்கலாம். மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு நல வாரியம் அமைத்துள்ளார். இதன் மூலம் பல்வேறு வாய்ப்பு பெருகும். இதனை செயல்படுத்த உள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

Related Stories:

More
>